இஸ்லாமிய சமய வழிபாடுகளுக்கு முதலிடம் வழங்கியவாறு இப்தார் விழா ஒன்று காலி மாவட்டச் செயலகத்தில்...
காலி மாவட்டச் செயலகத்தில் பணிபுரியும் இஸ்லாமிய உத்தியோகத்தர்களின் ரமழான் நோன்பு மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் விழா , காலி மாவட்டச் செயலாளர் கே.யூ. சந்திரலால் அவர்களின் பங்கேற்புடன் நேற்று (09) பிற்பகல் காலி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
அஷ்ஷேக் லுத்ஃபி மௌலவி அவர்களின் தலைமையில், இஸ்லாமிய சமய வழிபாடுகளுக்கு முதலிடம் வழங்கி, ரமழான் நோன்பின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கிரஆத் ஓதுதலை நுரானியா அஹதிய்யா பாடசாலை மாணவி சபியா மர்யம் நிகழ்த்தினார். விசேட துஆப் பிரார்த்தனையைத் தொடர்ந்து நோன்பு துறக்கும் நிகழ்வு ஆரம்பமானதுடன், அதன் பின்னர் விசேட விருந்தூபசாரம் நடைபெற்றது.
கஸீதா பாடுதல் மற்றும் நோன்பு துறப்பதற்கான அதான் ஓதுதல் ஆகியவற்றை கிந்தோட்டை முஹியித்தீன் ஜும்மா பள்ளிவாசல் அரூஸிய்யா மத்ரஸா மாணவர் உமைர் நிகழ்த்தினார். நுரானியா அஹதிய்யா பாடசாலை மாணவர் மயாஸ் அஹமட் இஸ்லாமியப் பாடல் ஒன்றை இசைத்து இந்நிகழ்வை வர்ணமயமாக்கினார்.
இதற்கிடையில், மாவட்டச் செயலாளர் இப்தார் விழாவில் கலந்துகொண்ட இஸ்லாமியப் பக்தர்களுடன் சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் காலி மேலதிக மாவட்டச் செயலாளர் (நிர்வாகம்) திருமதி அயேஷா காரியவசம், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி மற்றும் அபிவிருத்தி) செல்வி ஜீ.ஜீ. லக்ஷ்மி காந்தி உள்ளிட்ட காலி மாவட்டச் செயலகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.














