அவசர அனர்த்த நிலமைகளால் பாதிக்கப்படும் மக்களை மீட்பதற்கான அரச உத்தியோகத்தர்களைப் வலுவூட்டும் பயிற்சித் திட்டம் ஒன்று கடந்த (27) ஆம் திகதி காலி பழைய துறைமுகத் தளத்தை சார்ந்து நடைபெற்றது
வெள்ள அனர்த்தங்களுக்குத் தொடர்ச்சியாக முகங்கொடுக்கும் ஒரு மாவட்டம் என்ற ரீதியில், காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டச் செயலகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 50 அரச உத்தியோகத்தர்கள் இச்செயல்முறைப் பயிற்சியில் கலந்துகொண்டனர்.
அவசர அனர்த்தங்களின் போது உயிர்களைப் பாதுகாத்தல், பொதுமக்களை மீட்டெடுத்தல் மற்றும் அனர்த்த முதலுதவி வழிமுறைகள் குறித்த தேவையான அறிவை வழங்குதல் ஆகியன இத்திட்டத்தின் நோக்கங்களுள் முக்கியமானவை ஆகும்
அந்நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு, மீட்புப் படகுகளைச் செலுத்துதல் பற்றிய செய்முறை பயிற்சி, நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவரை மீட்புக் கருவிகளைப் (throwing bag) பயன்படுத்தி மீட்டெடுத்தல், முதலுதவிக் கூடாரங்களை அமைத்தல் போன்ற வழிமுறைகள் குறித்த செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதன் பயிற்றுவிப்பாளர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் இலங்கை உயிர் பாதுகாப்புச் சங்கத்தின் (Sri Lanka Life Saving) கே.எஸ்.எஸ். சொமிகெலும் அவர்கள் முன்னிட்ட பயிற்றுவிப்பாளர்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.
காலி மாவட்டச் செயலாளர் திரு. கே.யூ. சந்திரலால், மேலதிக மாவட்டச் செயலாளர் (நிர்வாகம்) திருமதி அயேஷா காரியவசம், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி மற்றும் அபிவிருத்தி) செல்வி ஜீ.ஜீ. லக்ஷ்மி காந்தி, உதவி மாவட்டச் செயலாளர் திரு டி.பி. நலிந்த உதயகுமார உள்ளிட்டோர் இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.
காலி மாவட்டச் செயலகத்தின் அனர்த்த நிவாரண சேவை மையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இப்பயிற்சித் திட்டம் நடைபெற்றது.

















